Saturday 15 July 2017

ஆதி திராவிடர் வரலாறு

இந்திய துணைகண்ட வரலாற்றின் ஆதி வரலாற்றை தொடங்கி வைத்தவர்களாகக் கருதப்படும் ஆதி திராவிடர்கள் பற்றின தரவுகள், படைப்புகள், ஆவணங்கள், மற்றும் அவர்களுடைய பணிகள் பற்றின குறிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கின்றன. அவற்றை முழுமையாக ஒருங்கிணைத்து ஒரு பொதுச்சித்திரத்தை இந்திய வரலாற்றிற்கு அளிக்க முடியும் என்கின்ற நிலை இருந்தும்  அது ஏனோ முன்னெடுக்கப்படாமல் இருக்கின்றது என்பது வருத்தத்திற்குறிய விசயம். இந்திய வரலாற்றின் ஒரு புறக்கணிக்கப்பட்ட பக்கமாகவே இந்தாட்டின் ஆதிக் குடிகளின் வரலாறு இருட்டடிப்புக்கு உள்ளாக்கும் போக்கு தொடர்ந்து நிலவுகின்றது.  குறிப்பாக தென்னிந்திய வரலாற்றில் ஆதி திராவிடர்கள் என்ற சொல்லின் பிரயோகம் நீண்ட காலம் நிலவி வந்தாலும் அச்சொல்லின் குறிப்பான காலத்தோற்றம் குறித்தோ அது தொடர்பான ஆய்வுகளையோ அவ்வளவாக கவனப்படுத்தாது தமிழக வரலாற்றின்  அடிப்படை பக்கங்களையே பார்க்க முடியாதோ என்கின்ற நிலை உருவாகி இருக்கின்றது.

தமிழக வரலாற்றின் பதிவாக பேசப்படும் நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்க, கட்சிகளின் வரலாறு பேசப்பட்ட அளவிற்கு ஆதி திராவிட மக்களின் வரலாறு, அரசியல் மற்றும் சமுதாய வரலாறு பேசப்படவில்லை என்பது ஒரு வரலாற்று விபத்தே. பண்பாட்டு மானுடவியல்,  மற்றும் சமூக அறிவியல் துணைகொண்டு  வரலாற்றின் இருண்ட பக்கங்களை நோக்குகின்ற போது நடுவு நிலை மாறாமல் அதை ஆராய வேண்டியது ஆய்வறிஞர்களின் கடமை. அதற்கு அவர்களுக்கு அடிப்படையான தரவுகள் தேவைப்படுகின்றது. அந்த அடிப்படையான தரவுகளில் ஒன்றுதான் திரிசரபுரம் பெருமாள் பிள்ளை அவர்கள் எழுதிய ஆதிதிராவிடர் வரலாறு எனும் நூல். 

1922ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் மீண்டும் மறுபதிப்பு கண்டதா, என்பது பற்றின குறிப்பு கிடைக்கவில்லை.  எனது சேகரத்தில் இருக்கும் அசல் நூலின் மின்னாக்கத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு வழங்குவதில் மகிழ்கிறேன். இந்நூலில் ஆதிதிராவிட மக்களின் வரலாறு,  அச்சொல்லின் தோற்றம், அது அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டபின் எழுந்த நிகழ்வுகள்,  சட்ட விபரங்கள் அம்மக்களின் தலைவர்கள், அவர்கள் நடத்திய இதழ்கள், போராட்டங்கள், ஆகியன விரிவாகக் குறிப்பிடப்படுகின்றன. பண்டைய காலம் முதல் 1922 வரை நடைபெற்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இந்த நூலில்  தொகுக்கப்பட்டுள்ளன.

கௌதம சன்னா


ரெட்டை மலை சீனிவாசன் அவர்களின் சீடரான ஆ.பெருமாள் பிள்ளை  அவர்களின் இந்த 109 பக்கங்கள் கொண்ட  நூல் தமிழ் ஆய்வுலகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்கள் தமிழ் நில வரலாற்றை  புரிந்து  கொள்ள உதவும் என்ற வகையில் இதனைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரத்தில் இணைப்பதில் மகிழ்கின்றோம்.

தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை அயோத்திதாசப் பண்டிதர்" என்ற எனது  கட்டுரையில் இந்நூல் பற்றியக் குறிப்பும் முன்னர் வந்துள்ளது. 




மின்னாக்கம், மின்னூலாக்கம்:  திரு.கௌதம சன்னா
இந்த நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்திற்காக வழங்கிய திரு.கௌதம சன்னா அவர்களுக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

முனைவர் சுபாஷிணி கனசுந்தரம்